சென்னை, குடியிருப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத கட்டுமான நிறுவனம், அதற்காக வசூலித்த, 1 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லுாரில், 2016ல் குடியிருப்பு திட்டத்தை தனியார் கட்டுமான நிறுவனம் செயல்படுத்தியது.
அதில், 1,076 சதுர அடி நிலத்தில் வீடு கட்டி கொடுப்பதாக, மதுமிதா மற்றும் சிவராமன் என்பவர்களிடம், 1 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம், 2016ல் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தப்படி, கட்டுமான நிறுவனம் புதிய குடியிருப்பு கட்டும் பணிகளை மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்தது.
இது குறித்து, மதுமிதா மற்றும் சிவராமன் ஆகியோர் அளித்த புகார் தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணையத்தின், சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் குறிப்பிட்டபடி, கட்டுமான நிறுவனம் புதிய குடியிருப்பு கட்டும் பணிகளை, குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்தவில்லை. எனவே, மனுதாரர் செலுத்திய, 1 கோடி ரூபாயை வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும்.
இந்த உத்தரவை கட்டுமான நிறுவனம், 30 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பான பத்திரங்களை ரத்து செய்ய, மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.