மேடவாக்கம், மேடவாக்கம் சந்திப்பில் நிலவிய போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு, கடந்தாண்டு மே மாதம், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
ஆனால், மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைக்கப்படாததால், வேளச்சேரி, நாராயணபுரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களிலிருந்து சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம், மாம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், அணுகு சாலை முழுதும் கொட்டப்பட்டிருந்த சிறு கற்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி, காயமடைவதும் தொடர்கதையானது. இதுபோன்ற விபத்தில் சிக்கி, கல்லுாரி மாணவர் ஒருவர் பலியானார்.
இதை சுட்டிக்காட்டி, நம் நாளிதழில் கடந்த 11ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பாலத்தின் கீழ் அணுகுசாலை அமைக்கும் பணியை, நேற்று முன்தினம் துவக்கியுள்ளனர்.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:
மேடவாக்கம் பாலத்தின் கீழ் அணுகுசாலை அமைக்க ஏற்கனவே 'டெண்டர்' விடப்பட்டிருந்தும், மழை காரணமாக சாலை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
தற்போது பணிகள் துவங்கி, துரித கதியில் நடக்கின்றன. 2,000 அடி நீளமும், 25 அடி அகலமும் உடைய இந்த அணுகுசாலை பணிகள், சில தினங்களில் முழுமையாக முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.