மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளைத்தில் 'மூன்றாவது கண்' என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், நகரில் குற்ற, சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பழுதடைந்த கேமராக்களை சீர் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகரில், ஊட்டி,கோவை, அன்னுார், சத்தியமங்கலம் ஆகிய நான்கு முக்கிய ரோடுகள் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று சேர்கின்றன.
நான்கு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள், ஒரே நேரத்தில் நகருக்குள் வரும்போது, பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் நகரில் அனைத்து ரோடுகளிலும், வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் போது, உள்ளூர் பொதுமக்கள், கடைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் எங்கு, எதனால் ஏற்படுகிறது, என்பது குறித்து, போலீசார் ஸ்டேஷனில் இருந்த படியே பார்ப்பதற்கு வசதியாக, மேட்டுப்பாளையம் நகரில் கோவை, ஊட்டி ஆகிய பாதையில், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில்,120 இடங்களில், போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன், கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதனால் மேட்டுப்பாளையம் நகரில், குற்ற சம்பவங்கள் நடைபெறுவது ஓரளவு குறைந்துள்ளது.
மேலும் திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை, கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்டறிந்து, கைது செய்யப்பட்டனர். ஆனால் நகரின் மேற்கு, தெற்கு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவில்லை.
இந்த இரண்டு பகுதிகளில் அடிக்கடி மோதல்களும், வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஒட்டு மொத்த நகரிலும், பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.
மேட்டுப்பாளையம் நகரில் மகாதேவபுரம், எஸ்.எம்.நகர் ஆகிய இரு பகுதிகளில், அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. இதனால் நகரில் பதட்டமான நிலை உருவாகி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், இரவில் படுத்திருக்கும் நபர்களிடம், சிலர் பணத்தை திருடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
மேலும் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. இதை எல்லாம் கண்காணிக்க, பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், அண்ணா வணிக வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் உள்ளன.
இங்கு பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், வணிக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் நிறுத்துகின்றனர். வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள், தங்களது இரு சக்கர வாகனத்தை வளாகத்தில் நிறுத்தி செல்கின்றனர். இங்கு நிறுத்திய வாகனங்களில், மூன்று வாகனங்கள் திருட்டு போயின.
அதனால் இந்த வளாகத்தை கண்காணிக்கும் பொருட்டு, கடை வியாபாரிகள் ஒன்றிணைந்து மூன்று கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
காலப்போக்கில் இந்த வளாகத்தில் அமைத்துள்ள கண்காணிப்பு கேமராக்கள், உடைந்தும், செயல்படாமல் உள்ளன. கடை வியாபாரிகள் இதை மாற்றவோ, சரி செய்யவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரும் கண்டு கொள்ளவில்லை.
அதனால் உடனடியாக எஸ்.எம். நகர், மகாதேவபுரம், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணா வணிக வளாகத்தில் பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய வேண்டும். மேட்டுப்பாளையம் நகர் முழுவதும் அமைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களை, பழுது ஏற்படாமல் இருக்க, அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டும். இதன் மூலம் குற்ற, சமூக விரோத செயல்களை குறைக்க முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.