அன்னுார்:அன்னுார் வார சந்தை வளாக கடைகள் கட்டும் பணி பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
அன்னுாரில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ஓதிமலை ரோட்டில் உள்ள வார சந்தை வளாகத்தில் சந்தை கூடுகிறது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிறு வியாபாரிகள் வந்து மளிகை உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகள், தக்காளி, காய்கறி, தேங்காய் ஆகியவற்றை கொண்டு வந்து விற்கின்றனர். ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் அன்னுார் பேரூராட்சிக்கு சந்தையில் சுங்கம் வசூலிப்பதன் மூலம் வருமானம் கிடைக்கிறது,
சந்தையில் கடைகள் இல்லாமல் மண் மேடுகளில் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். எனவே சந்தைக்குள் தரைத்தளம் அமைத்து மேற்கூரையுடன் கூடிய கடைகள் அமைத்து சந்தையின் வெளிப்புறம், வணிக வளாகம் அமைக்க 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கின.
கொரோனா காரணமாக பணிகள் தடை பட்டன. அதன் பிறகு இரும்பு கம்பி, செங்கல் ஆகியவற்றின் விலை உயர்ந்ததால் ஒப்பந்ததாரர் கட்டுபடியாகாமல் பணியை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
இதை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்ததன் விளைவாக மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன. இரும்பு துாண்கள் மற்றும் தரைத் தளம் அமைத்தல், மேற்கூரை அமைத்தல் ஆகிய பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'வார சந்தையில் தளம் சரியாக இல்லாததால் மழை பெய்யும் போது குளம் போல் மாறிவிடுகிறது. சந்தைக்குள்ளே செல்ல முடிவதில்லை. சேறும் சகதியும் ஆகிவிடுகிறது. சந்தையில் வெயிலிலும் மழையிலும் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
தற்போது மேற்கூரைகளுடன் கடைகளும் தரைத்தளமும் அமைப்பதால் வார சந்தைக்கு விடிவு பிறந்துள்ளது. வார சந்தை வளாகத்திலேயே தினசரி சந்தையும் நடத்தினால் பிரெஷ் காய்கறிகள் மக்களுக்கு கிடைக்கும். பேரூராட்சி நிர்வாகம் தினசரி சந்தை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.