வால்பாறை:வால்பாறை நகரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் பச்சமலை எஸ்டேட் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு செல்லும் ரோடு வழியாக, கருமலை பாலாஜி கோவில், வெள்ளமலை டனல், அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள் தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், பச்சமலை ரோடு, காளியம்மன் கோவில் எதிரில் உள்ள வளைவில், ரோட்டோரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நீண்ட கால போராட்டத்திற்குப்பின் இந்த ரோடு, நெடுஞ்சாலைத்துறையால் கடந்த மாதம் சீரமைப்பு பணி துவங்கியது.
ஆனால், ரோடு பணி முழுமையடையாமல் பாதியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் இந்த ரோட்டில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் சென்றால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரிலிருந்து பச்சமலை எஸ்டேட் செல்லும் ரோட்டில், பல இடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, காளியம்மன் கோவில் எதிரில் உள்ள வளைவில் ரோடு பணி நிறைவடையாத நிலையில், ரோட்டோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனகள் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், ரோட்டை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.