வால்பாறை:பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியிருவியில் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களுக்கும் கடந்த, 14ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலரும் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று விடுமுறையை கழித்து வருகின்றனர்.
அதில், பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில் உள்ள கவியருவியில், பொள்ளாச்சி மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணியரும் வருகின்றனர்.
இயற்கையாக கொட்டும் அருவியில், குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணியர் அதிகளவு வருகையால், கவியருவியில் கூட்டம் அலைமோதியது.
பூங்காவில் மக்கள்
வால்பாறை காமராஜ் நகரில் அமைக்கப்பட்டுள்ள, தாவரவியல் பூங்காவில், நேற்று உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் திரண்டனர். மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.
மக்கள் கூறுகையில், 'தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது மகிழ்ச்சி தான். ஆனால் பூங்காவை சுற்றியுள்ள புதர்களை அகற்றி, சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை மாற்ற வேண்டும். மக்கள் வசதிக்காக கேண்டீன் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
'பார்க்கிங்' இல்லை
வால்பாறை வந்த சுற்றுலா பயணியர் நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள தனியார்தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை நகரில் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'தொலை துாரத்திலிருந்து வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க குடும்பத்துடன் வருகிறோம். ஆனால், வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் ரோட்டில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
சுற்றுலா பயணியர் நலன் கருதி வால்பாறை நகராட்சி சார்பில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.