புதுடில்லி :'வரும், 2024 ஜூன் மாதம் வரை, பா.ஜ., தேசிய தலைவராக நட்டாவே தொடர்வார்' என, அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ''கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை விட, 2024 தேர்தலில் நட்டா தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம். பிரதமராக நரேந்திர மோடியே பதவியில் தொடர்வார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.
புதுடில்லியில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் துவங்கி, இரண்டு நாட்கள் நடந்தது. கூட்டத்திற்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, 62, தலைமை வகித்தார். இதில், பிரதமர் நரேந்திர மோடி, 35 மத்திய அமைச்சர்கள், 12 மாநில முதல்வர்கள், 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒன்பது மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் பதவிக் காலம், 20ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தலைவர் பொறுப்பில் நட்டாவே தொடர, பா.ஜ., பார்லிமென்ட் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருந்தது. இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
அடுத்த ஆண்டு ஜூன் வரை, தேசிய தலைவர் பதவியில் நட்டாவே தொடர வேண்டும் என, முன்னாள் தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். இதை, செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றனர்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கட்சித் தலைவர் பொறுப்பை நட்டா ஏற்றுக் கொண்டார். அந்த கடுமையான காலகட்டத்திலும், அவர் கட்சிக்காக திறமையாக உழைத்தார். இதன் பலனாக, பீஹார் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது.
ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜ., வெற்றி பெற்றது. கோவா சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அதிக பெரும்பான்மை பெற்றதுடன், மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தோம். குஜரத்தில் முந்தைய சாதனைகளை முறியடித்து மாபொரும் வெற்றி பெற்றோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மற்றும் செல்வாக்கை ஓட்டுகளாக மாற்ற, நட்டாவின் தலைமை பேருதவியாக இருந்தது. கடந்த, 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற வெற்றியை விட, 2024 லோக்சபா தேர்தலை நட்டாவின் தலைமையில் எதிர்கொண்டு மிகப் பெரிய வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தொடர்வார்.
நட்டா-வின் உறுதியான தலைமை மற்றும் பங்களிப்புகளுக்காக கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது எதிர்கால பதவிக்காலத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து, மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக, செயற்குழு கூட்டத்தில் பிரதமர் பேசினார். குறிப்பாக, நாட்டின் மிகச் சிறப்பான சகாப்தம் துவங்க உள்ளது. இதன் வளர்ச்சிக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பா.ஜ., இனி வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூக, பொருளாதார நிலையை மாற்றி அமைக்கும் சமூக இயக்கமாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள, 18 - 25 வயது வரையுள்ளவர்கள் நம் அரசியல் வரலாறை கண்டதில்லை. கடந்த ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் மற்றும் தவறுகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. எனவே அதை அவர்கள் உணர செய்ய வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.
'ஜி - 20' அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், இந்தாண்டு செப்., மாதம் நடக்கவுள்ள மாநாட்டுக்கு முன்னதாக, சென்னையின் மாமல்லபுரம், கேரளாவின் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூரு உட்பட, 15 நகரங்களில், 'ஜி - 20' கூட்டங்கள் நடக்கவுள்ளன. வரும், 31 முதல் பிப்., 2 வரை, மாமல்லபுரத்தில் ஜி - 20 கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், ஜி - 20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது குறித்தும், அதனால் உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்தும் அதிகரித்திருப்பது குறித்தும், மக்களிடம் பல்வேறு வழிகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து மாநில பா.ஜ., தலைவர்கள், மாநில அமைப்பு பொதுச் செயலர்களுக்கு, தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோர் அனுப்பியுள்ள அறிக்கை:ஜி - 20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடப்பதும், பிரதமர் மோடியின் எட்டாண்டு ஆட்சிக்கு உலகம் அளித்துள்ள நற்சான்று. மோடி ஆட்சியில் இந்தியா, பொருளாதாரத்தில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக வளர்ந்துள்ளது.
உற்பத்தி துறையிலும் சாதனை படைக்க துவங்கியுள்ளோம். இந்தியாவை ஏளனமாக பார்த்த உலக நாடுகள், இப்போது வியப்புடன் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளன. இந்த சாதனையை, அனைத்து வகைகளிலும் மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, ஜி - 20 இலச்சினையை வீட்டு வாயிலில் கோலமாக வரைவது, விழிப்புணர்வு நடை பயணம், ஜி - 20 மாநாடு குறித்து பொது இடங்கள், கல்லூரிகளில் பிரசாரம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை, பா.ஜ.,வினர் துவங்கியுள்ளனர்.