உடுமலை:உடுமலை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
உடுமலை நகரப்பகுதிகளில் நிலவி வரும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு தீர்வு காணும் வகையிலும், கன ரக வாகனங்கள் உள்ளிட்டவை புற நகர பகுதிகளிலும் பிற ரோடுகளுக்கு செல்லும் வகையில், சுற்றுச்சாலை அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தளி ரோடு, பொள்ளாச்சி ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, பழநி ரோடு மற்றும் கொழுமம் ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, பொள்ளாச்சி ரோட்டையும், திருப்பூர் ரோட்டையும் இணைக்கும் வகையிலும், திருப்பூர் ரோடு மற்றும் தாராபுரம் ரோடு ஆகியவற்றை இணைக்கவும் திட்டமிடப்பட்டது.
தாராபுரம் நுாறு அடி ரோடு வழியாக, பழநி ரோட்டை இணைக்கும் வகையிலும், சர்வே பணி, ஆக்கிரமிப்புகள் அகற்றம், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன.
ஆனால், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளாமல், பல ஆண்டாக இழுபறியாகி வருகிறது. இந்நிலையில், பழனியாண்டவர் நகர், ராமசாமி நகர் உள்ளிட்ட நகரின் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் புதிதாக, ஒரு பகுதிக்கு மட்டும் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு பகுதியிலிருந்து கொழுமம் ரோடு, பழநி ரோட்டிற்கு செல்லும் மக்களுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது.
அதே போல், மற்ற ரோடுகளையும் இணைக்கும் வகையில் ரோடு அமைக்க, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப்பகுதி மற்றும் புற நகரப்பகுதி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விரிவான ஆய்வு செய்து, புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.