- நிருபர் குழு -
காணும் பொங்கலையொட்டி, கால்நடை வளம் பெருக, சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில், கோட்டூர் சல்லிவீரம்மன் உள்ளிட்ட கோவில்களில் உருவார பொம்மைகளை வைத்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சவாரி வண்டிகளில் பயணித்து, பாரம்பரிய கலைகளை ஆடி, இளைய தலைமுறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. உழவுக்கு உறுதுணையாக இருக்கும், கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் வகையில், பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து, காணும் பொங்கலன்று, கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த பாரம்பரிய திருவிழா இன்றளவும், உயிர்ப்புடன் கிராமங்களில், கொண்டாடப்படுகிறது.
உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கோவிலில், பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். நேற்று அதிகாலை முதல், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பாலாபிேஷகம் செய்து, காளை, மாடு, நாய் உள்ளிட்ட உருவார பொம்மைகளை வைத்து வழிபட்டனர்.
இதே போல், தேவனுார்புதுார் ஊராட்சி ஆண்டியூர் சல்லிவீரய்யன் கோவிலில், சலகெருதுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், காலை முதலே நீண்ட வரிசையில், காத்திருந்து, சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த ஆல்கொண்டமாலனை தரிசனம் செய்தனர்.
மேலும், கிராமங்களில் இருந்து சலகெருதுகளை அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர். கோவில் மைதானத்தில், குழந்தைகளுக்கான கேளிக்கை விளையாட்டு சாதனங்கள், ராட்டினம் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சவாரி வண்டிகளில், மக்கள் கோவிலுக்கு வந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா, சிங்கையன்புதுார் மூலக்கடை, கல்லாபுரம் பிரிவு மற்றும் கோதவாடியில் உள்ள, ஆல்கொண்டமால் கோவில்களுக்கு சென்று அப்பகுதி மக்கள் பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர்.
பொங்கல் விழா, காப்பு கட்டும் நாளில் இருந்து, பூ பொங்கல் வரையுள்ள நான்கு நாட்களில், வீடுகளில் உள்ள பசு மாடு கன்று ஈன்றால், அந்த கன்று குட்டி, கோதவாடி ஆல்கொண்ட மால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது.
கன்று ஈன்ற மாட்டின் உரிமையாளர்கள், உடன் பிறந்த, சகோதரி வீட்டுக்கு, காப்பு கட்டு முடிந்து, முதல் நாள் தை பொங்கல் அன்று மாட்டுடன் சென்று, சகோதரிக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் புத்தாடை வழங்கி, மாட்டின் இரண்டு காதுகளில், மூன்று கீறல் இட்டு சுவாமி மாடாக அறிவிக்கப்படுகிறது.
அதன்பின், உறவினர்களுக்கு விருந்து வைத்து, பூ பொங்கல் அன்று, கிராமத்தில் உள்ள மைதானத்தில், சுவாமி மாடுகளை வரிசையாக நிறுத்தி, கழுத்தில் மணி கட்டி, வீடு வீடாக அழைத்து வருவது ஆண்டுதோறும் நடக்கிறது.
அதன்படி, நேற்று, இரண்டு சலங்கை மாடுகளுடன் வீடு வீடாக வலம் வந்தனர். சலங்கை மாட்டிற்கு, பொதுமக்கள் மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். இதனால், அந்த வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.
சலங்கை மாட்டுடன் வருபவர்கள் மீதும், உறவினர்கள் மீதும், மஞ்சள் நீர் ஊற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி விளையாடினர்.
பிற்பகல் 2.00 மணியளவில், சலங்கை மாடுகளை அழைத்து கொண்டு, ஆல்கொண்ட மால் கோவிலுக்கு சென்று, மாலை, 5:00 மணிக்கு திரும்பி வந்து, மீண்டும் மாட்டுடன் விளையாடினர். இதனால், கிராமமே விழாக்கோலம் பூண்டது.
ஆனைமலை
ஆனைமலை தாலுகா கோட்டூர் சல்லிவீரம்மன் கோவிலுக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, சலகெருதுகளை அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கரியாஞ்செட்டிபாளையம், கம்பாலபட்டி, பூவலப்பருத்தி உள்ளிட்ட பல கிராம மக்கள், பாரம்பரிய கலைகளான தேவராட்டம், கும்மியாட்டம் ஆடியபடி, சலகெருதுகளை அழைத்து வந்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, சலகெருதுகளை மறித்து ஆடி மகிழ்ந்தனர்.
கிராம தெய்வமாக சலகெருதுவை பராமரித்து, அதன் வாயிலாக நாட்டு மாடுகள் இனத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். மேலும், காளைகளை பராமரித்து, சவாரி வண்டி பயணத்தின் வாயிலாக இளைய தலைமுறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து, நாட்டுப்புற கலைகளை ஆடி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான பாரம்பரியத்தை இன்றும் உடுமலை, பொள்ளாச்சி பகுதி கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.