- நிருபர் குழு -
பொங்கல் பண்டிகைக்காக, கடந்த 13ம் தேதி முதல், நேற்று வரை பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால், பொள்ளாச்சியில் பணியாற்றும் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களும், வேறு மாவட்டத்தில் பணியாற்றும் பொள்ளாச்சியை சேர்ந்தவர்களும் சொந்த ஊருக்கு சென்று, பண்டிகையை கொண்டாடினர். இன்று, பணிக்கு திரும்ப வேண்டியுள்ளதால், குடும்பத்தினருடன் திரும்பினர்.
இதனால், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, பழநி, திருப்பூர், சேலம், சென்னை பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
* வால்பாறையில் பணியாற்றும் தேயிலை தொழிலாளர்களின், வாரிசுகள் வெளியூரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட, வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்தனர். விடுமுறைக்கு பின், நேற்று காலை முதல் வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டில் மக்கள் திரண்டனர்.
இதனால், வால்பாறையில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பழநி, சேலம், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் ரசு பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
குடும்பத்துடன் வந்த பயணியர், பஸ் ஏற முடியாமல் பல மணி நேரம் காத்திருந்தனர். கூட்ட நெரிசலை சமாளிக்க வெளியூருக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சந்திரசேகரிடம் கேட்டபோது, 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வால்பாறையில் இருந்து வெளியூர் செல்லும் பயணியர் வசதிக்காக, காலை, 4:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை தொடர்ந்து பஸ் இயக்கப்படுகிறது. 20 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் வெளியூருக்கு இயக்கப்பட்டது,' என்றார்.
*வெளியூர்களிலிருந்து வந்து உடுமலையில் பணிபுரிவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பொங்கல் விடுமுறைக்கு சென்றிருந்தனர். அதேபோன்று, வெளியூர்களில் பணியாற்றுவோர் உடுமலைக்கு வந்தனர்.
இந்த விடுமுறை நேற்று முடிவடைந்தது. இன்று, பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதையடுத்து, தங்களது ஊர்களுக்கு செல்ல மக்கள், மாணவர்கள் திரண்டனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டில், வந்த பஸ்களில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. பண்டிகை நாட்களில், கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.