- நிருபர் குழு -
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 106வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
சூளேஸ்வரன்பட்டியில் நடந்த விழாவில், உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிருபர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:
ஆட்சிக்கு வந்த, 18 மாதங்களில் எந்தவொரு நல்ல விஷயங்களையும் தி.மு.க., அரசு செய்யவில்லை. தமிழக மக்களுக்கு எந்த உதவியையும் செய்யாத அரசு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் கொடுத்துள்ளனர்.பொங்கல் பரிசு தொகுப்பும், குறைவாக தான் உள்ளது. இதை மறைப்பதற்காகவே, கவர்னரால் ஆட்சிக்கு பெரிய இடையூறு ஏற்பட்டுவிட்டதைபோல், மாய தோற்றத்தை உருவாக்கி, மக்களை திசை திருப்ப, தி.மு.க.,வினர் முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
* வால்பாறை நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், ரொட்டிக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, நகர துணை செயலாளர் பொன்கணேஷ் தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். விழாவில் அவைத்தலைவர் பாலு, இணை செயலாளர் விமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏ.டி.பி., தொழிற்சங்க அலுவலகத்தில், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் தலைமையில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர். விழாவில், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஷாஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி சார்பில் ரொட்டிக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு நகர செயலாளர் முருகன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
* திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி, பாப்பன்குளம் கிராமத்தில், கட்சிக்கொடியேற்றப்பட்டது.
மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமையில் கட்சியினர், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு, மரியாதை செலுத்தினர். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், மெட்ராத்தி, துங்காவி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, சோழமாதேவி, கடத்துார் மற்றும் கணியூர் பேரூராட்சியில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றியச்செயலாளர் காளீஸ்வரன் தலைமை வகித்தார்.
கணியூர் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. குடிமங்கலம் மேற்கு ஒன்றியம், புதுப்பாளையம் ஏ.டி., காலனி கிளை சார்பில் நடந்த விழாவில், மாவட்ட பிரதிநிதி ரங்கநாதன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.