உடுமலை:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக, பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து சாகுபடிகளிலும், அறுவடை பணிகள் துவங்க உள்ள நிலையில், வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் கூட்டம், விளைநிலங்களில், தொடர் சேதம் ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, நிலக்கடலை, மக்காச்சோளம் உட்பட பயிர்களில், செடிகளை முழுவதுமாக சேதப்படுத்தி, பொருளாதார சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது வன எல்லையில் இருந்து, 25 கி.மீ., துாரம் தள்ளி அமைந்துள்ள, பகுதிகளிலும், காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காட்டுப்பன்றிகள் கூட்டம், இரவு நேரங்களில், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.
விவசாயிகள் கூறியதாவது: அனைத்து சாகுபடிகளிலும், தொடர் மழையால், விளைச்சல் பாதித்துள்ளது. புதிதாக காட்டுப்பன்றிகளாலும், சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து, வேளாண்துறை, வனத்துறை இணைந்து கணக்கெடுத்து, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.