காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 70 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம், மேம்படுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் நடக்க உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கோட்டத்தில் நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் என மூன்று உட்கோட்டங்கள் செயல்படுகின்றன.
அந்தந்த பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு, மற்றும் மழைகாலத்தில் தண்ணீர் செல்வதற்கான சிறு பாலங்கள் போன்ற பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளன.
இதற்காக அனைத்து பணிகளுக்கும் சேர்த்து மொத்தம், 70 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்க உள்ளன.
இதில் காவாந்தண்டலம்,- மாகரல் சாலை செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. கடந்த மழைக்கு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரை சேதம் ஏற்பட்டு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.
வெள்ளத்தில் கரை அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிமென்ட் கற்கள் கரையில் பதிக்கும் பணி 4 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.
அதே போல் வாலாஜாபாத் பாலாறு தரைப்பாலம் கடந்த மழைக்கு பாதிக்கப்பட்டது. அந்த பாலத்தின் தற்காலிக சீரமைப்பு பணி 2.75 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 - -2023 ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த வேலைகள் நடக்கின்றன. அனைத்து வேலைகளும் 70 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்க இருக்கிறது.
இப்பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைக்கும் அதற்கான கால அவகாசம் உள்ளது. அதற்குள் அந்த பணியை செய்து முடிப்பார்கள்.
இந்த நிதியில் சாலை அகலப்படுத்துதல் பணிகள் அதிகம் நடக்கிறது. தவிர சாலை குறுக்கே மழைநீர் செல்வதற்கான சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற பணிகள், சேதம் அடைந்த சாலைகள் உறுதிபடுத்துதல் ஆகிய பணிகள் நடக்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.