காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வேகவதி ஆற்றின் இரு கரையோரங்கில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பலரும் பாதிக்கப்பட்டனர்.
ஆற்றின் குறுக்கே இருந்த சிறு பாலங்களால், தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டதால், குறுக்கே இருந்த பாலங்கள் உடைக்கப்பட்டன. அதன்படி, தாயார்குளம் பகுதியில் இருந்த இரு பாலங்களும் உடைக்கப்பட்டன.
தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில், உடைக்கப்பட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், உடைக்கப்பட்ட இரு பாலங்களையும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து வருகிறது.
ராட்சத குழாய்கள் பதித்து, காகிரீட் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அடுத்த சில நாட்களில் பணிகள் முடிந்தால், வழக்கம்போல், தாயார் குளம் பகுதியில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.