சூலுார்;காலங்கள் மாறினாலும், பழமை மாறாமல் கிராமங்களில், பட்டி பொங்கல் என்ற மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.
கோவை புறநகர் பகுதிகளான சூலுார், கருமத்தம்பட்டி, அன்னுார், காரமடை கோவில்பாளையம், பெரியநாயக்கபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில், வீடுகளில் மாடுகள் வளர்ப்பது கவுரவமாக கருதப்படுகிறது.
மண்ணின் வளம், தட்ப வெப்ப நிலை, சுற்று வட்டாரத்தில் விளையும் தீவனங்களுக்கு ஏற்ப மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாடுகள் வளரும் பகுதிகளை வைத்தே காங்கயம் மாடு, மணப்பாறை மாடு என, அழைக்கப்பட்டன.
ஏர் உழவுக்கும், விளை பொருட்களை கொண்டு செல்லவும் காளை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. கோமாதாவாக வழிபடும் பசுவின் பால் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் உற்ற நண்பனாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக, தை இரண்டாம் நாள், பட்டி பொங்கல் எனும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நேற்று முன் தினம் மாலை, சூலுார் சுற்று வட்டார பகுதிகளில் பட்டி பொங்கல் பாரம்பரிய முறைப்படியும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.
மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணம் பூசி, சலங்கை, காதோலை, கருகமணி உள்ளிட்ட ஆபரணங்களை அணிவித்து அழகுபடுத்தினர். தோட்டங்களில் பட்டி அமைத்து, பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர். 'வாங்க பட்டியாரே, சாப்பிடுங்க பட்டியாரே' என,பாட்டுப்பாடி மாடுகளை அழைத்தனர்.
நண்பர்கள், உறவினர்களை அழைத்து உற்சாகமாக கொண்டாடினர். மாடுகள் பட்டியை மிதித்து தாண்டியதும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட விவசாயிகள், அனைவருக்கும் பொங்கலை பிரசாதமாக வழங்கினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை குடும்பத்தில் ஒருவராக பாவித்து வளர்க்கிறோம்.
ஆண்டு முழுவதும் எங்களுடன் உழைக்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பட்டி பொங்கல் வைத்து வழிபட்டோம். காலங்கள் மாறினாலும் இன்றும் பழமை மாறாமல் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
நமது பண்பாடு, கலாசாரம், பழங்கால கலைகளை பாதுகாக்கும் அச்சாரமாக பொங்கல் பண்டிகை உள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி விவசாயம் அழியாமல் பாதுகாக்க குரல் கொடுப்போரும் இணைந்து மாட்டு பொங்கலை கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.