முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பேரூராட்சியில் ரோட்டோரம் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதற்காக வடிவேலு படத்துடன் காமெடி வாசகங்கள் எழுதி விழிப்புணர்வு பலகை வைத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முதுகுளத்தூர் காந்தி சிலையில் இருந்து பஸ்ஸ்டாண்ட், யூனியன் அலுவலகம் வரை 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை சாலை, தெருக்களில் ஆங்காங்கே குவித்து வைக்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை பணியாளர்கள் தெரிவித்தும் மக்கள் கண்டு கொள்வதில்லை.
பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் சார்பில் சுழற்சி முறையில் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பையை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் சாலையோரம் தெருக்களில் ஆங்காங்கே குப்பையை கொட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் இவ்வழியே செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் பேரூராட்சி பணியாளர்கள் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து ஒரு சில இடங்களில் பூச்செடிகள் வைத்தும், மற்ற இடங்களில் வடிவேலு படத்துடன் காமெடி வசனம் எழுதி, விழிப்புணர்வு பலகை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.