பொள்ளாச்சி;தென் தமிழகத்துக்கு ஜல்லிக்கட்டு; கிழக்கு தமிழகத்துக்கு மஞ்சுவிரட்டு என்பதை போல், கொங்கு மண்டலத்தின் வீரத்தை பறைசாற்றுவது ரேக்ளா ரேஸ்.
கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில், ரேக்ளா பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
கொங்கு மண்டலத்தில் மீட்டர், தென் மண்டலத்தில் கிலோ மீட்டர் என, இரு பிரிவுகளில் இந்த பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், காங்கேயம் பசு, கன்று ஈன்றதும், காளை கன்றாக இருந்தால் மவுசு கூடி விடும்.
இது பற்றி, தமிழ்நாடு ரேக்ளா சங்க பொறுப்பாளர், ஜெயப்பிரகாஷ் கூறியதாவது: பெரும்பாலும், தென் மண்டலத்தில் புளியங்குடி, உப்பலஞ்சேரி காளைகளும், கொங்கு மண்டலத்தில் காங்கேயம் மற்றும் பர்கூர் லம்பாடி இன காளைகளுமே பந்தயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தென் மண்டல காளைகள் மணிக்கு, 30 - -40 கி.மீ., வேகமும், கொங்கு மண்டல காளைகள் மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும் ஓடக்கூடியவை.
அதேற்கேற்ப, இரண்டு வகை மாடுகளுக்கும் கொடுக்கப்படும், உணவு முறைகளும் சற்று மாறுபடும்.ஒன்பதாம் மாதத்தில், பசுவிடம் இருந்து கன்று பிரிக்கப்பட்டு, பந்தயத்துக்கான பயிற்சி அளிக்கப்படும்.
உணவு முறையில் துவங்கி, அதற்கான வளர்ப்பு முறைகள் வரை, பின்பற்றப்படும் அனைத்தும், 'ஸ்பெஷல்' கவனிப்புகளாக இருக்கும்.முட்டை, பால், பேரீட்சை, தேன், கருப்பட்டி பிசைந்து உண்ணக் கொடுத்து, வெறும் வயிற்றில் நல்லெண்ணெயும் கொடுக்கப்படுகிறது.
இரண்டரை ஆண்டுகள் கழித்து, பற்கள் முளைக்க துவங்கியதும், பயிற்சி இன்னும் தீவிரமாகும். இரண்டு அல்லது நான்கு பற்கள் முளைத்த காளைகள், 200 மீட்டர் பந்தயத்திலும், ஆறு பற்கள் முளைத்த காளைகள், அவை முளைத்தது முதல் ஐந்தாண்டுகளுக்கு, 300 மீட்டர் பந்தயத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
காளைகளுக்கு போதை மாத்திரை, பேட்டரி ஷாக் கொடுக்காமல், முள் கொண்டு குத்தாமல், வளர்ப்போரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சீறிப்பாயும் வகையில், தயார் படுத்த வேண்டுமென்பது, காலம் காலமாக கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடாகும். 2014ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 2017ல் அவசர சட்டம் இயற்றப்பட்டு, மீண்டும் போட்டிகள் நடத்தப்பட்ட பின், காகிதங்களில் எழுதப்படாமல் பின்பற்றப்பட்டு வந்த, இந்த கட்டுப்பாடுகள் எழுத்து வடிவிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இதன்படியே, தற்போது காளைகள் தயார் செய்யப்படுகின்றன. போட்டிக்கு முன்பும் பின்பும், தார் ரோடுகளில், நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியுடன், நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பரிசு பெறும் காளைகளில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் காளைகளுக்கு, ஒரு பவுன் முதல் அரை பவுன் வரை, பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒரு முறை போட்டியில் வெற்றி பெறும் காளைகள், 5 முதல் 7 லட்சம் வரை விலைக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து வெற்றி பெறும் காளைகளை யாரும் விற்பதில்லை.
இத்தகைய, புகழ்பெற்ற ரேக்ளா பந்தயத்துக்கு, ஜல்லிக்கட்டுக்கு இருப்பதை போன்ற மவுசு இல்லை. கோவை, கொடிசியாவில் நடைபெறும், ரேக்ளா பந்தயத்தை தவிர, மற்ற இடங்களில் நடக்கும், பந்தயங்கள் பேசப்படுவதில்லை.
தமிழக அரசு, இந்தாண்டு சென்னை அருகே படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதுபோல், அடுத்தாண்டு ரேக்ளா பந்தயத்தை நடத்த வேண்டும். அவ்வாறு, நடத்தப்பட்டால் கொங்கு மண்டலத்தின் பெருமை, உலகெங்கும் பரவி தலைத்து நிற்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகத்தில் இந்தாண்டுக்கான முதல் ரேக்ளா ரேஸ், கோவை, ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரியில் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து, அடுத்த மாதம், கொடிசியாவில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற உள்ளது.அதன்பின், பொள்ளாச்சி உட்கோட்டத்தில், பட்டியகவுண்டனுார், ஒத்தக்கால்மண்டபம், ஆனைமலை, குளத்துபாளையம், முத்துக்கவுண்டனுார், நெ.10 முத்துார், திம்மங்குத்து, தென்சங்கம்பாளையம், பொள்ளாச்சி ஜோதி நகர், ஜமீன் காளியாபுரம், ஒடையகுளம், வி.காளியாபுரம் பகுதிகளில் நடைபெறுகிறது.இதற்காக, காளைகளை தயார் செய்யும் பணிகளில், அவற்றின், உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.