காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருககாலிமேடு சாலியர் தெருவின், மேற்கு திசையின் ஒரு பகுதியில் மழை நீர் மற்றும் வீட்டு உபயோக கழிவு நீர் செல்லும் கால்வாய் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.
இதனால், கிழக்கு பகுதி சாலையோரம் உள்ள கால்வாய் நிரம்பி கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் பல நாட்களாக ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது. ஒரே இடத்தில் தேங்கியுள்ள கழிவு நீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதோடு, துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீரை முழுதும் அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.நிர்மல்குமார், திருக்காலிமேடு.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பயணியர் நிழற்குடை அருகில் மின் விளக்கு வசதி உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த மின் விளக்கு எரிய வில்லை.இரவில் இருட்டாக இருக்கிறது. அங்கிருந்து பெருநகர், செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பர். இரவில் மின் விளக்கு எரியாததால் பெண்கள் அச்சத்துடன் அங்கு நிற்க வேண்டியிருக்கிறது. மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எல். சக்திவேல், காஞ்சிபுரம்.