காஞ்சிபுரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம், காஞ்சிபுரம் ஓரிக்கை பணிமனை எண் இரண்டில் உள்ள தடம் எண் டி 34 என்ற அரசு பேருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், ஆற்பாக்கம், மாகரல், திருப்புலிவனம் வழியாக உத்திரமேரூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.
மகளிருக்கு கட்டணமில்லாமல் இயக்கப்படும் இப்பேருந்தின் பெயர் பலகையை பணிமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், அதில் உள்ள தடம் எண் மற்றும் ஊரின் பெயர் தெளிவாக தெரியாமலும், பெயர் பலகையின் கண்ணாடியில் துாசு படிந்தும் இருந்தது.
இதனால், இப்பேருந்து ஆற்பாக்கம், மாகரல், திருப்புலிவனம் வழியாக உத்திரமேரூர் செல்கிறதா அல்லது பெருநகர், மானாம்பதி வழியாக செல்கிறதா என்பதையும் அறிய முடியாமல் பயணியர் தவித்து வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் ஓரிக்கை எண் 2 பணிமனை சார்பில், தடம் எண் டி 34 பேருந்து முழுதும் 'வாட்டர் சர்வீஸ்' செய்யப்பபட்டு, பெயர் பலகை மாற்றப்பட்டு, கண்ணாடியும் சுத்தமாக துடைக்கப்பட்டுள்ளது.
தற்போது தடம் எண் மற்றும் ஊர் பெயர் எழுதப்பட்ட பெயர் பலகை தற்போது 'பளீச்' என, தெரிகிறது.