காஞ்சிபுரம்: காஞ்சி, செங்கையில் பாயும் பாலாற்றில் மூன்று இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு இடங்களில் அரசு தடுப்பணை கட்டுமா என்பது விடை தெரியாத கேள்வியாகவே நீடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாலாற்றில் நுாற்றுக்கணக்கான டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியாக பாயும் பாலாற்றில், தடுப்பணை கட்டக்கோரி, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஒவ்வொரு பருவமழைக்கும் பாலாற்று நீர் வீணாக கடலில் கலந்ததே தவிர, ஏரிகளை நிரப்பவோ அல்லது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த எந்த தடுப்பணையும் கடந்த காலங்களில் கட்டப்படவில்லை.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாலாற்றில் ஏழு தடுப்பணை கட்டப்படும் என, 2017ல் அறிவித்தார்.
அதன்படி ஈசூர்- - வள்ளிபுரம் இடையே 28 கோடி ரூபாயிலும், வாயலுாரில் 30 கோடியிலும், உள்ளாவூரில் 32 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெய்த பருவமழையில், இந்த தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.
அதேசமயம், மேலும் கட்ட வேண்டிய நான்கு தடுப்பணைகள் பற்றி பொதுப்பணித்துறையின் கருத்துருக்கள், நீர்வளத்துறையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தி.மு.க., ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளான நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெங்குடி, உதயம்பாக்கம் இரு இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடாவரம், பாலுார் இரு இடங்கள் என மொத்தம் நான்கு இடங்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், புதிய தடுப்பணைகளுக்கு எந்த நிதி ஒதுக்கீடுக்கான அரசாணையும் இதுவரை பிறப்பிக்கவில்லை.
நிலத்தடி நீரை உயர்த்தவும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கவும், வெங்கடாவரத்தில் முன்னுரிமை கொடுத்து தடுப்பணை கட்ட வேண்டும் என காஞ்சிபுரம் நகர மக்களிடமும் கோரிக்கை உள்ளது. ஆனால், இதுவரை தடுப்பணை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையில், பாலாற்றில் அதிகபட்சமாக 1 லட்சம் கன அடி சென்றது. அதேபோல், 2022 பருவமழை சமயத்திலும் அதிகபட்சமாக 30 ஆயிரம் கன அடி நீர் பாலாற்றில் இருந்து கடலுக்கு சென்றது.
இதன்மூலம், ஒவ்வொரு பருவ மழை சமயத்திலும் பல நுாறு டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறதே தவிர, அருகில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிட தேவையான தடுப்பணைகள் கட்ட அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்த ஒரே காரணத்தால், தி.மு.க., அரசு தடுப்பணைகள் கட்டாமல் இருக்கக் கூடாது என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாலாற்றில் கட்ட வேண்டிய மீதமுள்ள நான்கு தடுப்பணைகள் சம்பந்தமாக, அரசுக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
தடுப்பணை கட்டுவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்கும். தடுப்பணை கட்டப்படுவது சம்பந்தமாக அரசாரணை வெளியிடப்படும் என நாங்களும் எதிர்பார்த்துஉள்ளோம்.
உதயம்பாக்கம் பாலாற்றில் பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்ட, 390 கோடி ரூபாய் தேவைப்படுவதாக திருந்திய கருத்துரு ஒன்றையும் அனுப்பியுள்ளோம். அரசாணை வெளியிட்டவுடன் பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.