ஊட்டி:தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து, ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
நீலகிரி கலெக்டர் அம்ரித் பேசியதாவது:
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை மேம்படுத்த செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், உல்லத்தி, தொட்டபெட்டா, எப்பநாடு, பர்லியார், தெங்குமரஹாடா, ஜக்கனாரை, நெலாக்கோட்டை ஆகிய ஏழு கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், துறைவாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மனுக்கள் பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்டம் பாலகணேஷ், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.