மதுரை: ''மதுரையில் முன்னாள் மத்தியமைச்சர் அழகிரியை அமைச்சர் உதயநிதி சந்தித்ததன் மூலம் பாலாறு, தேனாறு ஓடப் போகிறதா. இது வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துக்காட்டு,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
அவர் கூறியதாவது: இருவர் சந்திப்பால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி 'தீராத விளையாட்டு பிள்ளையாக' உள்ளார்.
நேரு ஸ்டேடியத்தில் 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்தார். பொறுப்பாக செயல்படவில்லை. ஆனால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் எல்லா இடங்களிலும் உதயநிதி சிறப்பாக செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். மக்களுக்கு தி.மு.க., அரசு எதுவும் செய்யவில்லை.
சட்டசபையில் கவர்னர் உரையின் போது எதிர்த்து தி.மு.க., கூட்டணியினர் தரக்குறைவாக கோஷமிட்டது மரபு மீறிய செயல். கவர்னர் உரையை கண்டித்து முதல்வர் பேசியது சட்டசபை வரலாற்றில் கரும்புள்ளி. இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் வீண் வரிச்செலவுகளை குறைக்க முடியும் என்பது பிரதமர் மோடியின் கனவு திட்டம். எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறும் ஸ்டாலின், மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்றார்.
Advertisement