காஞ்சிபுரம்,
பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவோர், காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் பொழுதுபோக்கு சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாததால், காணும்பொங்கலான நேற்று காஞ்சியில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை காணமுடிந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி, வரதராஜ பெருமாள், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், காணும் பொங்கலான நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இக்கோவில்களில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களும், சபரிமலை அய்யப்பன், மேல்மருவத்துார் செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இக்கோவில்களில் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வெளியூர்களில் இருந்து கட்டுச்சோறு கட்டி வந்த பக்தர்கள் தரிசனம் முடிந்தவுடன் கோவில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டு சென்றனர்.