தானே : மஹாராஷ்டிராவில் 'ஆன்லைன்' மோசடி கும்பலால், ஒருவர் 5 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில், தானே நகரில் வசிக்கும் ஒரு நபருக்கு தன் வீட்டில் உள்ள 'டிவி'யில் சேனல்கள் தெரியாததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மொபைல் போனில் அழைத்துள்ளார். அப்போது, வேறொரு எண்ணில் இருந்து அவரது போனுக்கு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், மொபைல் போனில் 'எனிடெஸ்க்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். இந்த செயலி வாயிலாக மொபைல், கம்ப்யூட்டரில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு, ஆன்லைன் வழியாகவே தீர்வு காண முடியும்.
மர்ம நபர் கூறியதை நம்பி, தானே நபர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதன் வாயிலாக, மர்ம நபர் அந்த போனில் இருந்த வங்கி தகவல்களை திருடியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் தன் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.