ஆர்.கே.பேட்டை பொங்கல் திருவிழாவை ஒட்டி, ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடியில் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று துவங்கிய இந்த போட்டி நாளை வரை நடைபெறுகிறது. இதில், நுாற்றுக்கணக்கான சேவல்களுடன் அவற்றின் உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
சேவல்களின் நிறத்திற்கு ஏற்ப, 'ஜாவா, யாகூத், தும்மர்' என பல்வேறு வகையாக இந்த சேவல்கள் இனம் பிரிக்கப்படுகின்றன.
சம வயது, எடை கொண்ட சேவல்களுக்கு இடையே சண்டை நடத்தப்படுகிறது. வெற்றுக்காலுடன் போட்டியிடும் சேவல்களின் திறன் அவற்றின் செயல்பாட்டை கொண்டு கணிக்கப்படுகிறது.
சிறப்பு தீவனம் கொடுத்து அவற்றுக்கு நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து அவற்றை சண்டைக்கு தயார்படுத்துகின்றனர்.
திறமையான சேவல்களின் ஆக்ரோஷமான செயல்பாட்டை களத்தில் காண்பதற்காக, சுற்றுப் பகுதியை சேர்ந்த பலரும் விளக்கணாம்பூடியில் குவிந்துள்ளனர்.