திருத்தணி, திருத்தணி மலைக் கோவிலில் நேற்று காணும் பொங்கல் விழா மற்றும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்தது.
இதனால், பொது வழியில் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
பொங்கல் பண்டிகை விழாவையொட்டி, தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை என்பதாலும், காணும் பொங்கல் விழா என்பதாலும் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் இரவு வரை தொடர்ந்து இருந்தது.
முன்னதாக, காணும் பொங்கல் விழாவையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மஹா தீபாராதனை நடந்தது.
பொங்கல் தினத்தன்று உற்சவர் முருகர், மலைக்கோவிலில் அர்ச்சகர்கள் வசிக்கும் பகுதியிலும், மாட்டு பொங்கல் தினத்தன்று உற்சவர் முருகர் மேல்திருத்தணி பகுதியிலும் வீதியுலா வந்தார்.நேற்று, காணும் பொங்கல் விழாவையொட்டி, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் திருத்தணி பெரிய தெரு, சுமைதாரர்கள், திருத்தணி நகரம் முழுதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து சென்றனர்.மாலை 6:00 மணிக்கு, பழைய பஜார் தெரு அருகில் உள்ள சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின், இரவு 8:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் மீண்டும் மலைக் கோவிலுக்கு சென்றார்.