ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முக்கியமானது. இதன் மொத்த கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி.
மழை நீர் மற்றும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணைக்கட்டில் இருந்து, சாய்கங்கை கால்வாய் வழியே வரும் கிருஷ்ணா நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரம். வடகிழக்குப் பருவமழை, 'மாண்டஸ்' புயல் காரணங்களால் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது.
கண்டலேறு அணைக்கட்டில் இருந்தும், சாய்கங்கை கால்வாய் வழியே கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருந்தது.
நீர்வரத்து வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் வந்ததால், நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்து முழு கொள்ளளவை அடைந்தது.
நேற்று காலை முதல், உபரி நீர் வெளியேற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்று, காலை 6:00 மணி நிலரவப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 220 கன அடி, நீர்ப்பிடிப்பு பகுதிகள் வழியே, 70 கன அடி என மொத்தம், 290 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
கொள்ளளவு, மூன்று டி.எம்.சி., நீர்மட்டம், 34.67 அடி. இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 550 கன அடி நீர் சென்னை புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
பேபி கால்வாய் வழியே, 38 கன அடி நீர், சோழவரம் ஏரிக்கு செல்கிறது.