சென்னை : உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட, 52.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,029 கிராம் தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'தாய் ஏர்வேஸ்' விமானம், நேற்று முன்தினம் சென்னை வந்தது. இதில் வரும் பெண் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சந்தேகத்திற்கு உரிய பெண் பயணி ஒருவரை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல, இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீலங்கன்' விமானம் சென்னை வந்தது.
அதில் பெண் பயணி ஒருவரை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் தங்கப்பசை அடங்கிய மூன்று பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் நகைகளை, ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இலங்கையில் இருந்து சென்னை வந்த 'இண்டிகோ' விமானத்தில் பயணித்த பெண் பயணி கடத்தி வந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 52.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,029 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், மூன்று பெண் பயணியரிடமும் விசாரணை நடத்துகின்றனர்.