சென்னை, சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக, கடந்தாண்டில் 1.17 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை, திருவள்ளூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் சந்தீப்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ., கிரீன்ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வாயிலாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 1,200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
தவிர 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு தினமும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
சென்னையில் அழைப்பு வந்த ஏழு நிமிடங்களில், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கடந்தாண்டில் 108 அம்புலன்ஸ் சேவை வாயிலாக சென்னையில் மட்டும் 1.17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அதில், பிரசவ சிகிச்சைகளுக்காக பயணித்த 7,656 கர்ப்பிணியர் பயன்பெற்றுள்ளனர். 15 கர்ப்பிணியருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் நடந்தது.
மேலும், சாலை விபத்துகளில் சிக்கிய 9,927 பேர் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 95 ஆயிரத்து, 195 பேர் பயனடைந்துள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து, 998 கர்ப்பிணியரும், சாலை விபத்துக்குள்ளான 10 ஆயிரத்து, 906 பேரும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பயனடைந்துள்ளனர். 80 கர்ப்பிணியருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.