செங்குன்றம், நடந்து செல்வோரை வழி மறித்து, 'ஆசி' வழங்குகிறோம் என, கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கையர் சிலரிடம், பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, நடந்து செல்லும் பெண்கள் உட்பட பலரிடம், திருநங்கையர் சிலர் வழி மறித்து, 'ஆசி' வழங்குகிறோம் என, தலா 50 ரூபாய் வீதம் பணம் பறிக்கின்றனர்.
சிலர், பணம் இல்லை என்று, தங்களிடம் உள்ள 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுத்தால், அதைவாங்காமல், 50 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று, அவர்களுக்கு தொல்லை கொடுத்து, பணம் பறிக்கின்றனர்.
அதே போன்று பேருந்து நிலையத்தில் இறங்கி முகவரி தேடி அலையும், வடமாநில தொழிலாளர்களிடமும் பணம் பறிக்கின்றனர்.
அதனால், பேருந்து அல்லது ஆட்டோ கட்டணத்திற்கு மட்டும் பணம் வைத்திருப்போர், அதையும் இழந்து நடந்து செல்லும் நிலையில் பரிதவிக்கின்றனர்.
அந்த பகுதியில் திருநங்கையர் பலர் இருந்தாலும், அவர்களில் சிலர் மட்டுமே இதுபோன்ற 'அடாவடி' நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்துக்கின்றனர்.
பாதிக்கப்படுவோர் இதுகுறித்து, பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் உள்ள போலீசாரிடம் புகார் செய்தாலும், அங்குள்ள செங்குன்றம் போலீசார், மேற்கண்ட பிரச்னை குறித்து கண்டுகொள்வதில்லை.
அதனால், பணத்தை இழக்கும் பலர், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் தலையிட்டு, மேற்கண்ட பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.