திருத்தணி, திருத்தணி, கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 42. இவர், காந்தி ரோடு பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்றில், 10 ஆண்டுகளாக கேன்டீன் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, தியேட்டரில் கேன்டீன் வேலை செய்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு வாலிபர் அனுமதி இன்றி பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்தார். அதற்கு பணம் கொடுக்குமாறு ஊழியர் நாகேந்திரன் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நாகேந்திரனை கடுமையாக தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் படுகாயமடைந்த நாகேந்திரன், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நாகேந்திரன் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்குப் பதிந்து, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ், 26, என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தினேஷ் மீது, திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.