லக்னோ, உத்தர பிரதேசத்தில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன், வளர்ப்பு நாய்களுக்கு கோலாகலமாக திருமணம் நடந்த சம்பவம், அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
உத்தர பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் உள்ள சுக்ராவலி கிராமத்தைச் சேர்ந்த திவேஷ் சவுத்ரி என்பவர், 'டாமி' என்ற ஆண் நாயை வளர்த்து வருகிறார்.
இவரது மாமனார், 'ஜெல்லி' என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார்.
ஆசையாக வளர்த்து வரும் இந்த இரு நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்க, இக்குடும்பத்தினர் திட்டமிட்டனர்.
இதற்காக, திருமண பத்திரிகை அச்சடித்து உற்றார், உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் நடந்தன. மணமக்கள் ஊர்வலம், வரவேற்பு விருந்து போன்ற சடங்குகளும் அரங்கேறின.
இறுதியாக, விசேஷ தினமான மகர சங்கராந்தி அன்று, இரு நாய்களுக்கும் மாலைகளை மாற்றி வெகு விமரிசையாக திருமணத்தை நடத்தி முடித்தனர்.
இது தொடர்பான 'வீடியோ'க்கள், புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.