ஹைதராபாத், ஹைதராபாதில் நடந்து வரும் த வாக்சின் வார் என்ற ஹிந்தி படப்பிடிப்பில், பிரபல இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் மனைவியும், நடிகையுமான பல்லவி ஜோஷி மீது கார் மோதியதில் அவர் காயமடைந்தார்.
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற சர்ச்சைக்குரிய படத்தின் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. இவர் தற்போது தி வாக்சின் வார் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார்.
இதில், நானா படேகர், அனுபம் கெர் மற்றும் இயக்குனரின் மனைவியான பல்லவி ஜோஷி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பின்போது, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, நடிகை பல்லவி ஜோஷி மீது மோதியது.
'இதில் அவர் காயம் அடைந்தாலும், சிகிச்சைக்குப்பின் தொடர்ந்து நடித்தார்' என படக்குழுவினர் தெரிவித்தனர்.
இது பற்றி பல்லவி கூறுகையில், ''தற்போது நான் நலமாக உள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகி விடுவேன்,'' என்றார்.