வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரா: உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பங்கி பிஹாரி கோவில் வளாகத்தை சீரமைக்க, மாநில அரசு 5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மாநில முதல்வருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுரா அருகே கிருஷ்ணர் பிறந்த தலமாகக் கருதப்படும் புகழ்பெற்ற பிருந்தாவனம் பங்கி பிஹாரி கோவில் வளாகத்தை சீரமைக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இக்கோவிலை சுற்றியுள்ள 5 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால், கோவிலை சுற்றிலும் குடியிருப்புகள், ௩௦௦ சிறிய கோவில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

சமீபத்தில் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் சீரமைக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி இதை திறந்து வைத்தார். இதேபோல, பிருந்தாவன கோவில் வளாகத்தையும் சீரமைக்க, மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு, பல நுாறு ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், கோவில் பூசாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இத்திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி, முதல்வருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். 'இங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீடுகள், கோவில்கள் இடிக்கப்பட்டால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என தெரிவித்துள்ளனர்.
மதுரா தொகுதி பா.ஜ., எம்.பி.,யான நடிகை ஹேமமாலினி, ''இக்கோவில் வளாக சீரமைப்பு திட்டம், சர்வதேச சுற்றுலாவுக்கு வழிவகுக்கும். இதன் வாயிலாக, உள்ளூரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ''அதே சமயம், இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பூசாரிகள் உள்ளிட்டோரின் நலன்களும் கணக்கில் கொள்ளப்படும்,'' என, நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.