க.க.சாவடி:க.க.சாவடி அடுத்து பிச்சனூரில், ரங்கசமுத்திரம் பிரிவு அருகேயுள்ள ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவிலில், பொங்கல் மகா உற்சவம், கடந்த 15ம் தேதி பெரிய அபிஷேகத்துடன் துவங்கியது.
மூன்றாம் நாளான நேற்று, விவசாயிகள் தங்கள் வார்ப்பு மாடுகளின் பாலால், மாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். நூற்றுக்கணக்கானோர் மாடு, கன்று, எருது, ஆடு, கோழி ஆகிய உருவங்களை மண்ணால் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு வரை நடந்த இந்நிகழ்ச்சியில், கேரள மாநிலம் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, கொழிஞ்சாம்பாறை, கோபாலபுரம், மேனாம்பாறை, எருத்தேன்பதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், பிச்சனூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
க.க.சாவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று தீர்த்தவாரி நடக்கிறது. நாளை சுவாமி தரிசனத்துடன் விழா நிறைவடைகிறது.