கோவை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 2022-23ம் ஆண்டுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதன் காலிறுதிப்போட்டிகள் கோவை, திருவள்ளூர், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் நடந்தன.
இதில் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில், இரண்டு நாட்கள் (டெஸ்ட்) நடந்த காலிறுதிப்போட்டியில், கோவை மாவட்ட அணியும், திண்டுக்கல் மாவட்ட அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கோவை அணியின் நித்வின் (38), முகமது ஹாலித் (45) ரன்கள் சேர்க்க கோவை அணி, 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் அணியின் சித்தார்த் சிறப்பாக பந்து வீசி, ஆறு விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை துவங்கிய திண்டுக்கல் அணி, 143 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. கோவை அணிக்காக முகமது ஹாலித் மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர்.
அடுத்து, இரண்டாம் இன்னிங்சை விளையாடிய கோவை அணி, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன் எடுத்தது. இதன் மூலம் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை எடுத்ததால், கோவை அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது.