கோவை;தேசிய அளவில் நடந்த சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவுகளில், கோவை சச்சிதானந்தா பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது.
அகில இந்திய சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஓ.பி., ஜிண்டல் பள்ளி சார்பில் நடந்தது.
இப்போட்டியில், மண்டல அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற எட்டு பள்ளி அணிகள், லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இப்போட்டியில் கோவை, கல்லாறு சச்சிதானந்தா பள்ளி அணி பங்கேற்றது.
மாணவர் பிரிவு லீக் முதல் போட்டியில், ஓ.பி., ஜிண்டல் பள்ளி அணியிடம் தோற்ற சச்சிதானந்தா அணி, அடுத்த இரண்டு போட்டிகளில், குஜராத் டிவைன் சைல்டு பள்ளி மற்றும் புனே எஸ்.என்.பி.பி., பள்ளி அணிகளை வீழ்த்தி, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப்போட்டியில் டிவைன் சைல்டு பள்ளி அணியை வென்ற சச்சிதானந்தா அணி, இறுதிப்போட்டியில், ஓ.பி., ஜிண்டல் பள்ளியிடம் போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இரண்டாம் இடத்தை பிடித்தது.
இதேபோல், மாணவியர் பிரிவிலும், சச்சிதானந்தா பள்ளி அணி, அரையிறுதியில் ஹரித்வார் எஸ்.ஆர்.வி.எம்., பள்ளி அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் ஓ.பி., ஜிண்டல் அணியிடன் தோற்று, இரண்டாம் இடம் பிடித்தது.
தேசிய போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலாளர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் துணை முதல்வர் சக்திவேல் பாராட்டினர்.
போட்டி முடிந்து நேற்று கோவை திரும்பிய மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.