கிளைகளை அகற்றணும்
வடவள்ளி, 38வது வார்டு, அருண் நகர், நான்காவது மெயின் ரோட்டில் உள்ள மரம், ஒருபுறம் சாய்ந்த நிலையில் உள்ளது. மரத்தின் கிளைகள் வீடுகள் மீது, விழும் நிலையில் இருப்பதால், ஆபத்தான கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பழனியப்பன், வடவள்ளி.
சாலையில் குளம்
சின்னவேடம்பட்டி, 42வது வார்டு, முருகன் நகரில், மழைக்காலத்தில் சாலையில் குளம் போல தண்ணீர் தேங்குகிறது. உரிய வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- பொதுமக்கள், முருகன் நகர்.
அடிக்கடி விபத்து
பேரூர் ரோடு, பச்சாபாளையம், ராமகிருஷ்ணா மருத்துவமனை எதிரே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளை, சரிவர மூடவில்லை. குண்டும், குழியுமான சாலையால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- சண்முகம், பொம்மண்ணாம்பாளையம்.
பெயர்பலகை தெரியவில்லை
ஈச்சனாரி பகுதியில், மேம்பாலத்தின் கீழ் ஊரின் பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் கோவிலுக்கு புதிதாக வரும் பக்தர்கள், தெரியாமல் மேம்பாலத்தில் ஏறிச் செல்கின்றனர். மேம்பாலம் துவங்குவதற்கு முன்பே, கற்பகம் சிக்னல் மற்றும் ரத்தினம் கல்லுாரிக்கு அருகே பெயர் பலகை வைக்க வேண்டும்.
- ஜெயகிருஷ்ணன், ஈச்சனாரி.
யார் தலையில் விழுமோ?
கே.கே.புதுார், 43வது வார்டு, மணியம் காளியப்பன் வீதியில் உள்ள தனியார் கட்டடத்தின் முகப்பிலிருந்து, சிலாப்புகள் பெயர்ந்து சாலை மற்றும் அருகிலுள்ள வீடுகள் மீது விழுகிறது. பொதுமக்கள் நடக்கும் போது விழுந்தால், உயிரிழப்பு ஏற்படும்.
- பொதுமக்கள், கே.கே.புதுார்.
தெருவிளக்கு பழுது
கோவை கிழக்கு மண்டலம், 57வது வார்டில், 'எஸ்.பி.9, பி - 30' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்கு எரியவில்லை.
- பழனிச்சாமி, 57வது வார்டு.
வழியில் ஒளியில்லை
புளியமரம் பேருந்து நிறுத்தம் முதல் சீரநாயக்கன்பாளையம் செல்லும் வழியில், பாலத்திற்கு முன்பு தெருவிளக்குகள் எரிவதில்லை.
- கார்த்திகா, சீரநாயக்கன்பாளையம்.
தடுப்புச்சுவர் வேண்டும்
போத்தனுார் மேம்பாலத்தில், சாலை நடுவே தடுப்புக்காக வைக்கப்பட்டுள்ள கற்கள், அதை சுற்றிலும் குவிந்து இருக்கும் மணலால், விபத்து நடக்கிறது. கற்கள் மற்றும் மணலை அகற்றி, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
- அபு, போத்தனுார்.
திறந்தவெளியில் குப்பை
இடையர்பாளையம், ராமலட்சுமி நகர், 34வது வார்டு, இரண்டாவது வீதியில், தொட்டி இல்லாததால், திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. சாலையெங்கும் சிதறிக்கிடக்கும் குப்பையை அகற்றி, தொட்டி வைக்க வேண்டும்.
- ராகவன், இடையர்பாளையம்.
நாய்களால் அச்சுறுத்தல்
பீளமேடு, ஏ.டி.காலனி, தண்ணீர் தொட்டி வீதியில், கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றுகிறது. நடந்து செல்வோரை கடிக்கின்றன.
- பிரதாப், பீளமேடு.