வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் விவாதிக்க, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து, அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இலங்கைக்கு தேவையான பொருளாதார உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அளித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து, இந்த மூன்று நாடுகளுடன் இலங்கை அரசு தொடர்ந்து விவாதித்து வருகிறது.
இலங்கை தொலை தொடர்புத்துறை மற்றும் 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' ஆகிய நிறுவனங்களை தனியார் மயமாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் விவாதிக்க, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை கொழும்பு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவ அமைச்சகத்தின் கேபினட் கமிட்டி உறுப்பினராக உள்ள ஜெய்சங்கரின் கொழும்பு பயணத்தின் போது விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து, நம் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை உறுப்பினராக்க ஆதரவு தரும்படி இலங்கையை அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரும் செப்., மாதம் நடக்கும், 'ஜி - 20' மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்க, இலங்கைக்கு அவர் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகின் எந்த மூலையிலும் போர் குற்றங்கள் நடந்தாலும், இதற்கு காரணமானவர்கள் அமெரிக்காவில் வசித்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு உள்ளார். இதன் காரணமாக, இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, கலிபோர்னியாவில் உள்ள தன் வீட்டுக்கு இனி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வட அமெரிக்க நாடான கனடா, போர் குற்றம் புரிந்தோருக்கு ஏற்கனவே தடை விதித்தது. தற்போது அமெரிக்காவிலும் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.
- புதுடில்லி நிருபர் -