திருப்பூர்:திருப்பூரில் தொழில் துறை அமைப்புகள் சார்பில் அமைத்த சாலைகள் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டன.
திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. ஈஸ்வரன் கோவில் பாலம் முதல், மணியகாரம்பாளையம் பாலம் வரையில் நொய்யலின் தென்புறக் கரையில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு நினைவாக தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த ரோடு பயன்பாட்டில் உள்ளது.
அதே போல், வடபுறக்கரையில், 'நிட்மா' சங்க பொன்விழா ஆண்டு நினைவாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வளம் பாலம் ரோடு முதல் மணியகாரம்பாளையம் ரோடுபாலம் வரை இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோட்டில் மணியகாரம்பாளையம் சாலை பாலம் முதல் காசிபாளையம் சாலை பாலம் வரை, திருப்பூர் சாயஆலை உரிமையாளர் சங்கம் சார்பிலும், தென்பகுதி கரையில், பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் டெக்கிக் அமைப்பு சார்பிலும், மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.நெரிசல் குறையும்...
நொய்யல் ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள, இந்த சாலைகள் ரோடுகள் நகரின் வாகன போக்குவரத்துக்கு பெரும் உதவிகரமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, எரிபொருள் செலவு மற்றும் நேர விரயமும் தவிர்க்கப்படும் என எதிர்பார்ககப்படுகிறது.
இந்த சாலைகள், நேற்று மக்கள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ் திறந்து வைத்தார். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம், கோவிந்தசாமி, 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், ஆண்டவர் ராமசாமி உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள், தொழில் துறையினர், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.