திருப்பூர்:பூங்காங்களில் இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக காணும் பொங்கல் கொண்டாடினர்; கிராமங்களில், பூ பறிப்பு நிகழ்ச்சியுடன், பண்டிகை நிறைவடைந்தது.
தைப்பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரியம் என்பதால், நகரம், கிராமம் என, மாறாத பழக்க, வழக்கங்களுடன், விழாவை உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடுகின்றனர். திருப்பூர் நகரப்பகுதியில் நேற்று, காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா உட்பட, நகரப்பகுதியில் உள்ள பூங்காக்களில், காலை முதல், மாலை வரை கூட்டம் அலைமோதியது. சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள், அதிக அளவு பூங்காக்களில் காணப்பட்டனர். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடி மகிழ்ந்தனர்.
கிராமப்புறத்தில், தை 3வது நாளான நேற்று, பூப்பறிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிராமத்தை சேர்ந்த சிறுவர் துவங்கி முதியவர் வரை, அனைவரும் பூப்பறிக்க சென்றனர். முறுக்கு, கரும்பு மற்றும் உணவு பண்டங்களுடன், ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் கூடினர்.
கும்மியாட்டம், விளையாட்டு, ஆடல், பாடல் என, உற்சாகமாக கொண்டாடினர். அதன்பின், கொண்டு சென்ற தின்பண்டங்கங்களை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
இறுதியாக, அப்பகுதியில் உள்ள மலர் வகைகளை பறித்துவந்து, கிராமத்தின் விநாயகர் கோவில் வைத்து, கும்மியடித்து, வழிபாடு செய்து பொங்கல்பண்டிகையை நிறைவு செய்தனர்.