கோவை:ரூ.144.80 கோடி ஒதுக்கி, கோவையில் ஐந்து இணைப்பு சாலை ஏற்படுத்தும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, ஓராண்டுக்கு மேலாகி விட்டது; அரசாணைக்காக, மாநகராட்சி காத்திருக்கிறது.
கோவை நகர பகுதியில், நகர ஊரமைப்புத்துறை அங்கீகரித்த மற்றும் உத்தேசித்த திட்டச்சாலைகள் ஏற்படுத்தாதது மற்றும் இணைப்பு சாலைகள் உருவாக்காதது உள்ளிட்ட காரணங்களால், பிரதான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, ஐந்து இடங்களில் இணைப்பு சாலை உருவாக்க திட்டமிட்டுள்ள மாநகராட்சி, ரூ.144.80 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறது.
இணைப்பு சாலைக்கான பணிகள், உள்ளூர் திட்ட குழும நிதியில் மேற்கொள்ளப்படும் என, மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் நிதி கேட்டு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
2021ல் கோவையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இத்திட்டத்தை அறிவித்திருந்தார். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் நிதி ஒதுக்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கேட்டதற்கு, ''கோவையில், ஐந்து இடங்களில் இணைப்பு சாலை உருவாக்க ரூ.144.80 கோடி கேட்டு, கருத்துரு அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட வேண்டும். அரசாணைக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.
இணைப்பு சாலைகள் எங்கெங்கே?
முதல் கட்டமாக, 56வது வார்டு பன்மால் ரோடு, பி.எஸ்.ஜி., ரோடு, பி.பி.எஸ்., காலனி விஸ்தரிப்பு ரோடு, அண்ணா நகர் விஸ்தரிப்பு ரோடு, வரதராஜா மில் பீளமேடு ரோடு ஆகிய பகுதிகளில், ரூ.18.59 கோடிக்கு விடுபட்ட இணைப்பு சாலை, 65 மற்றும், 66வது வார்டுகளில் புலியகுளம் பிரதான ரோடு முதல் ராஜிவ்காந்தி நகர் வரை, ரூ.45.62 கோடிக்கு இணைப்பு சாலை, 15வது வார்டில் ஐஸ்வர்யா நகர் முதல் மருதமலை பிரதான சாலை வரை, ரூ.19.87 கோடிக்கு இணைப்பு சாலை, 56வது வார்டில் அவிநாசி ரோடு அண்ணா நகர் விஸ்தரிப்பு சாலை முதல் வரதராஜா மில் சாலை வரை, ரூ.55.54 கோடிக்கு இணைப்பு சாலை, 40வது வார்டில் எஸ்.என்.ஆர்., கல்லுாரி ரோடு, ஆவராம்பாளையம் ரோடு, நவஇந்தியா ரோடு பகுதிகளில், ரூ.5.18 கோடிக்கு விடுபட்ட இணைப்பு சாலைகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.