திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, ஜீவநதி நொய்யல் சங்கம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து 'திருப்பூர் பொங்கல் திருவிழா 2023' என்ற பெயரில், மூன்று நாள் விழாவாக திருப்பூரில் குதுாகலத்துடன் நடைபெற்றது.
இதற்காக, நொய்யல் ஆற்றின் கரையில் மேடை அமைக்கப்பட்டது. ஆறும் அதன் இரு கரைகளும் துாய்மைப்படுத்தப்பட்டது. கடந்த 15ம் தேதி, சமத்துவ பொங்கல் வைத்து திருவிழா துவங்கியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று பொங்கல் திருவிழா நிறைவாக, திருப்பூர் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, ஆற்றின் இரு கரைகளிலும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 3 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர்.
மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ், கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக, 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி வரவேற்றார்.
சிறப்பு வழிபாடு
தொடர்ந்து, கமல விநாயகர் மற்றும் சித்தி விநாயகர் கோவில்களில் வழிபாடு நடைபெற்றது. விழாவில், கொங்கு பண்பாட்டு மையக்குழுவினர் சார்பில், பெருங்சலங்கையாட்டம், வள்ளிக்கும்மி, செந்தமிழ் காவடியாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றன.
நேற்று மாலை நடந்த கலைவிழாவில், விகடகவி கலைக்குழுவின் கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், வித்யாசாகர் பள்ளி, ஜெய் சாரதா பள்ளி, கொங்கு மெட்ரிக் பள்ளி, தாய்த் தமிழ் பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக விழாவில், அகில் ரத்தினசாமி எழுதிய 'நொய்யல் பயணம்' என்ற நுால் வெளியிடப்பட்டது. திருப்பூர் நகர மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும், தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இதுபோன்ற விழாவை மீண்டும் காண ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில், பங்கேற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.