கோவை:பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நேற்று, மக்கள் குடும்பத்துடன் அருகிலுள்ள பொழுதுபோக்கு இடங்கள், கோவில்களுக்குச் சென்று, மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
மருதமலை, தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மலைக்கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மக்கள் குடும்பத்துடன் கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பூண்டி அருகே உள்ள ஈசா யோகா மையத்துக்கு கோவை மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், மக்கள் அதிகம் வந்திருந்தனர்.
மால்கள், சினிமா தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியிடங்களுக்குச் செல்வதற்காகவும், வெளியூர்களில் இருந்து பண்டிகை விடுமுறை முடிந்து, கோவை திரும்பிய மக்களாலும், பஸ்ஸ்டாண்டுகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், காந்திபார்க், வ.உ.சி., பூங்கா, வ.உ.சி., மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என கூடி மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர்.
பிச்சனுார் மால கோவிலுக்கு, சுற்றுப்பகுதி விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதலே, மாட்டு வண்டிகள் வரத் துவங்கியதால், கோவிலின் சுற்றுப்பகுதி விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள், நேர்த்திக்கடனுக்காக 'உருவாரம்' படைத்து வழிபட்டனர்.
குளக்கரைகள், ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், ஆசுவாசமாக ஏராளமான இளம் தலைமுறையினர் நடந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.
Advertisement