-நமது நிருபர்-
கோவையில் போலீசின் எச்சரிக்கையை மீறி, பொங்கலுக்கு முந்தைய நாட்களில், அனுமதியின்றி சிறப்புக்காட்சிகளை திரையிட்டது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிந்துள்ள நிலையில், அந்த காட்சிகளுக்கு முறைப்படி வரி செலுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், புதிதாக ரிலீசாகும் பெரிய நடிகர்களின் படங்களை, ரசிகர்களுக்கான காட்சிகள் என்ற பெயரில், தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகளாகத் திரையிடுவது வழக்கமாகவுள்ளது.
தமிழ்நாடு சினிமா விதிகளின்படி, சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதியே இல்லை என்ற நிலையில், இந்தக் காட்சிகளைத் திரையிடுவதே தவறு என்று பலரும் வாதிட்டு வருகின்றனர். சட்டரீதியாக இதை எதிர்த்தும், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் அதையும் மீறி, ஒவ்வொரு பண்டிகையின்போதும் இந்த விதிமீறல் நடந்து வருகிறது. இந்த பொங்கலை முன்னிட்டு, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
திட்டமிட்டே இந்த உத்தரவு, ஜன.,13ல் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு முன்பே அதாவது ஜன.,11 அதிகாலை 1:00 மணிக்கும், 4:00 மணிக்கும் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன.
சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்தது பற்றி, தியேட்டர் நிர்வாகங்களை போலீசார் எச்சரித்திருந்தனர்.
குறிப்பாக, கோவையில்அதிகாலையில் புதுப்படங்களை திரையிட்டால், ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும்; சட்டம்- ஒழுங்கு பிரச்னை வருமென்று போலீசார் தெரிவித்திருந்தனர்.
அதையும் மீறி, கோவை மாநகரில் அதிகாலை வேளையில் சிறப்புக் காட்சிகளைத் திரையிட்டது தொடர்பாக, குமரன் தியேட்டர், யமுனா தியேட்டர், கே.ஜி., சினிமாஸ், சாந்தி தியேட்டர், காஸ்மோ தியேட்டர் ஆகிய தியேட்டர்களின் மேலாளர்கள் மீது, போலீசார் வழக்கும் பதிந்துள்ளனர்.
தமிழ்நாடு சினிமா ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 291ம் பிரிவின்படி, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
ஆனால், இது கண் துடைப்புக்காக போடப்பட்ட வழக்கு என்பது தெளிவாகியுள்ளது. அது மட்டுமின்றி, இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்கள் 'ஆன்லைன்' முறையில் விற்கப்பட்டாலும், அதே டிக்கெட்கள் 10 மடங்கு அதிக விலைக்கு, அதிகபட்சமாக 1,500 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை 'ப்ளாக்'கில் விற்கப்பட்டன.
தியேட்டர் டிக்கெட்களுக்கு ஜி.எஸ்.டி., 28 சதவீதம் வசூலிக்கப்படும் நிலையில், அனுமதியின்றி நடந்த சிறப்புக் காட்சிகளுக்கு, எவ்வாறு ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.
இதுபற்றி விசாரித்து, தியேட்டர் நிர்வாகங்களிடம் ஜி.எஸ்.டி, வசூலிக்க வேண்டியது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.