கோவை, ஜன. 18-
சிறுவாணி அணையில், 26 அடிக்கே தண்ணீர் இருப்பு இருக்கிறது. இதைக்கொண்டு, இன்னும் நான்கரை மாதங்களுக்கு கோவை மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில், மாநகராட்சி உள்ளது.
கோவை மாநகராட்சியின் மேற்கு பகுதி வார்டுகள் மற்றும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரே, குடிநீர் ஆதாரம்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்தாண்டு தென்மேற்கு பருவத்தில், கன மழை காணப்பட்டது. வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இருந்தாலும், குடிநீர் தேவைக்காக, நாளொன்றுக்கு, 10 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் மட்டும், 36 வார்டு மக்களுக்கு சிறுவாணி குடிநீர் வழங்கப்படுகிறது. அதனால், அணையின் நீர் மட்டம், 26 அடியாக குறைந்திருக்கிறது.
தண்ணீர் எடுக்கும் நீர்புகு கிணற்றில் மொத்தமுள்ள நான்கு வால்வுகளில் இரண்டு வால்வுகள் வெளியே தெரிகின்றன. இனி மழை பெய்ய வாய்ப்பில்லை.
தற்போதுள்ள இருப்பை கொண்டு, ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்கு பருவ மழை பெய்ய துவங்கும் வரை, நான்கரை மாதங்களுக்கு சமாளிக்க வேண்டிய நெருக்கடி, மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தற்போது, நாளொன்றுக்கு, 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, 36 வார்டு மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது.
கோடை காலமான மே மாதம் பற்றாக்குறை ஏற்படும்போது, சப்ளை காலம் இடைவெளி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்குள் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
அத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், இன்னும், 20 ஆண்டுகளுக்கு கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்னையே வராது' என்றனர்.