கம்மம்: சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்த பொது கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். இவரது தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது கட்சி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தலில் போட்டியிடப் உள்ளதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று (ஜன.,18) நடைபெற்றது. பொது கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொது கூட்டத்திற்காக சாலைகள் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள், தோரணங்கள் கட்டப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியவதாவது: நமது தாய்மொழிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு ஹிந்தியை தேசிய மொழியாக சித்தரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தாய்மொழிகளை அழித்து ஹிந்தியை திணிப்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கும்.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தீர்க்கமான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியிருப்பது, நீதித்துறை சுயாட்சியை அழிக்க பா.ஜ., அரசு முனைந்துள்ளது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. தலைமை நீதிபதியே இந்த நடவடிக்கையை எதிர்த்தார். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அகிலேஷ் பேசுகையில், 'பா.ஜ., ஆட்சிக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை நேற்று பா.ஜ., ஏற்றுக்கொண்டது. தங்கள் நாட்களை எண்ணத் துவங்குபவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது. இப்போது இன்னும் 399 நாட்கள் மட்டுமே உள்ளன' என பேசினார்.