புதுடில்லி:புதுடில்லி சட்டசபையில், யமுனை நதி மாசு குறித்து விவாதிக்க கோரி அமளி செய்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரை சபையில் இருந்து வெளியேற்ற காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
புதுடில்லி சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது.
மூன்று நாட்கள் நடந்த இந்தக் கூட்டத் தொடரில், முதல் நாள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று முன் தினமும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளி செய்தனர். இதையடுத்து, பா.ஜ.,வின் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மூன்றாவது நாளான நேற்று சபை கூடியதும், தலைநகர் டில்லியில் அதிகரித்துள்ள மாசு குறித்து விவாதிக்க வேண்டும் என பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த விதிமுறையில் கீழும் அந்த விவாதத்தை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் மறுத்தார்.
இதையடுத்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பாட்டிலில் கொண்டு வந்த யமுனா நதி நீரை சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர்.
அதைப் பார்த்த சபாநாயகர் கோயல், “இந்த தண்ணீரில் 'ஆசிட்' கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபையை துணை நிலை கவர்னர் முடக்குகிறார்.
“இதற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ.,கள் வெட்கப்பட வேண்டும். முதலில் கவர்னரிடம் சென்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க வேண்டாம் என கூறுங்கள்,” என, ஆவேசமாக பேசினார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அஜய் மஹாவர், அனில் பாஜ்பாய், மோகன்சிங் பிஷ்ட், ஓபி ஷர்மா ஆகிய நான்கு பேரையும் சபையில் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருந்த நிலையில், அக்கட்சியின் மற்ற நான்கு எம்.எல்.ஏ.,க்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் ரித்தாலா தொகுதி எம்.எல்.ஏ., மஹிந்தர் கோயல் சட்டசபையில் திடீரென எழுந்து பணத்தை காட்டினார். இதனால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:ரோகிணியில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் தற்காலிக ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கிறது. அதை தட்டிக்கேட்ட எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதை வாங்க நான் மறுத்ததால் என்னை மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,”என்றார்.ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் இந்தப் பேச்சு சபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், “இந்த விவகாரத்தை விசாரிக்க சட்டசபையின் மனுக்கள் குழுவுக்கு பரிந்துரை செய்கிறேன்,”என்றார்.
சட்டசபைக்கு , பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் யமுனா நதி நீரை பாட்டிலில் எடுத்து வந்திருந்தனர். சபை துவங்குவதற்கு முன், சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், எதிர்க்கட்சி தலைவருமான ராம்வீர் சிங் பிதுரி கூறியதாவது:யமுனா நதியில் இருந்துதான் புதுடில்லி மக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், மாசு நிறைந்த இந்த நீரை குடிக்கும் மக்களுக்கு புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. யமுனை நதியை சுத்தப்படுத்த புதுடில்லி அரசுக்கு 2,500 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆனால், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் இந்த எட்டு ஆண்டுகளில்தான் யமுனா நதி அதிக மாசு அடைந்துள்ளது என மாநில அரசின் அறிக்கையே கூறுகிறது. மத்திய அரசு வழங்கிய 2,500 கோடி ரூபாய் எங்கே போனது என்பதை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் கூற வேண்டும். இதுகுறித்து, சட்டசபையில் விவாதிக்க 'நோட்டீஸ்' கொடுத்துள்ளோம். அனுமதிக்க மறுத்தால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.