புதுடில்லி:சமூக வலைதளத்தில் 'விசா' வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து பணமோசடி செய்த பீஹாரை சேர்ந்த இருவரை புதுடில்லி போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர், பீஹார் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, புதுடில்லி மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் யாதவ்,39, பிரவின் குமார்,38, ஆகிய இருவரும் சமூக வலைதளமான பேஸ்புக்கில், வெளிநாடுகளுக்கு விசா வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துஉள்ளனர்.
அதை நம்பி பலர் இந்த இருவரின் வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தியுள்ளனர். குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தவுடன் சமூக வலைதளத்தில் உள்ள கணக்கை முடக்கி விட்டு, வேறு பெயரில் கணக்கு துவங்கி விளம்பரம்செய்துள்ளனர்.
இதேபோல ஏராளமானோரிடம் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகார்படி விசாரணை நடத்திய புதுடில்லி போலீசார், இருவரையும் கடந்த 13ம் தேதி மதுபானி ஜெய் நகரில் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஆறு செல்போன்கள், மொபைல் போன் சிம் கார்டுகள், லேப்-டாப் மற்றும் பல்வேறு வங்கிகளின் டெபிட் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அவர்கள் பெயர்களில் பல்வேறு வங்கிகளில் இருந்த 2.5 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்த பணத்தில் இருவரும் மதுபானி ஜெய்நகரில் ஒரு இடம் வாங்கி அதில் கடை ஒன்று கட்டியுள்ளனர்.
அதை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.