புதுடில்லி:பழங்குடியினர் நடன விழா புதுடில்லியில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதுகுறித்து, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியதாவது:
குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்த நாளை முன்னிட்டு, ராணுவ இசை நிகழ்ச்சி மற்றும் பழங்குடியினர் நடன விழா நடத்தப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சி, புதுடில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வரும் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடக்கின்றன. ராணுவ இசை நிகழ்ச்சியில், ராணுவத்தினரின் ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்படும்.
குக்ரி, கட்கா, மல்லகாம்ப், களரிபாய்டு, தங்கா உள்ளிட்ட 20 பழங்குடியின பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிகாலத்தில் இருந்தே நிலம், வனம் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்கும் இனமாக பழங்குடியினர் திகழ்கின்றனர். சுதந்திரப் போராட்டத்திலும் துணிச்சலுடன் போரிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஆர்.ஜெயா உடனிருந்தார்.